என் கண்ணான கண்ணன் !
பேரானந்தத்தைத்
தந்தருளும் பேரழகன் !
பேதைக்குப் பகலவன் போன்றவன் !
பெருவிழியால் புவிதனை மயக்கும் பார்த்திபன் !
பெதும்பை அன்றாடம் துதிக்கும் பாற்கடல் வேந்தன் !
மகுடத்தில் மயிற்பீலி சூடி நிற்கும் மதுசூதனன் !
மங்கையின் மனதைக் கொள்ளை கொண்ட மாதவன் !
மலர்மாலை சூடி விளையாடும் முரளி மனோகரன் !
மடந்தைக்கு மகிழ்வை அள்ளித் தரும் முகுந்தன் !
அர்ஜுனன்னுக்குக் கீதோபதேசம் செய்த அச்யுதன் !
அரிவைக்குக் கீதையாய் விளங்கும் அனந்தன் !
தென்றலாய்ப் புல்லாங்குழலூதும் துவாரகதீசன் !
தெரிவையின் பார்வையில் தங்கிடும் துவாபரநாதன் !
பேரதிசயங்கள் பல நிகழ்த்தும் பரந்தாமன் !
பேரிளம் பெண்ணின் பூஜைக்குரிய பகவான் !
புவியெங்கும் நிறைந்து நிற்கும் புருஷோத்தமன் !
பூவையின் துணையாய் விளங்கும் புவன சுந்தரன் !
கோவர்த்தன மலையைத் தூக்கிய கோபாலன் !
கோதையின் உள்ளம் கவர்ந்த கோவிந்தன் !
காளியனின் சிரசில் நர்த்தனம் ஆடிய கண்ணன் !
காரிகையின் சலங்கையில் குடிகொண்ட கணியன் !
வெண்ணையைத் திருடும் வேங்குழல் பாலன் !
வெகுளிப்பெண்ணின்
வேதனை தீர்க்கும் வேடன் !
ஹரியின் அவதாரமாய்த் தோன்றிய ஹரிகிருஷ்ணன் !
ஹ்ருதயங்களில்
நிலைத்து நிற்கும் ஹ்ருஷிகேசன் !
குழலூதி உலகை மயங்கச் செய்யும் குருவாயூரப்பன் !
குழந்தைக்கு உலகநீதியைப் போதித்த குருவானவன் !
ஜகத்தினில் தர்மத்தை நிலைநாட்டும் ஜகன்னிவாசன் !
ஜனனியின் தலைவனாய்த் திகழும் ஜனார்தனன் !
சங்குச் சக்கரம் ஏந்திய நவநீத கிருஷ்ணன் !
சகியின் துயர் துடைக்கும் நந்தகோபன் !
கர்வம் கொண்ட அசுரரை வதைத்த கேசிநிஷூதனன் !
கன்னியின் கருவிழியாய்க் காட்சியளிக்கும் கேசவன் !
யசோதையின் பிள்ளையாய் வளர்ந்த யாதவன் !
யமுனா தீரத்து மனங்களின் யோகேஸ்வரன் !
வார்த்தைகளால்
ஜாலம் செய்யும் வார்ஷ்ணேயன் !
வாழ்வின் ரகசியத்தைப் போதித்த வாசுதேவன் !
என் சர்வமுமாய் விளங்கும் சர்வேஸ்வரனே !
என்னை சமர்ப்பிக்கிறேன் உன் சரணங்களிலே !
- அரங்க ஸ்ரீஜா
கண்ணன் !!!
அன்போடும்
பண்போடும் என்னை வளர்க்கும் அன்னை நீ !
அறிவோடும்
தெளிவோடும் என்னை ஆளாக்கிய தந்தை நீ !
கலைகளைத்
தெளிவுறக் கற்பிக்கும் என் குருநாதன் நீ !
கற்காத கலைகளிலும்
என்னை தேர்ச்சியடைய வைத்தவன் நீ !
அச்சம் கொள்ளுகையில் தைரியம் தரும் அண்ணன் நீ !
அச்சுறுத்தும்
இடையூரிலிருந்து என்னை மீட்கும் மன்னன் நீ !
சங்கடங்களில்
உடன் துணை நிற்கும் சகோதரன் நீ !
சந்தோஷங்களை
அள்ளித் தரும் என் சொந்தமும் நீ !
நாட்டியத்தில்
என் சலங்கை ஒலியாய் இருப்பதும் நீ !
பாட்டில்
என் தாளமும் ராகமுமாய்த் திகழ்வதும் நீ !
காணும் திசையெல்லாம்
தோன்றும் கடவுள் நீ !
காரிகையின்
மனம் கவர்ந்த கயவனும் நீ !
நெருக்கடியில்
நல்வழி காட்டும் நண்பன் நீ !
நெருங்கி
வந்தால் விலகி ஓடும் மாயவன் நீ !
வீணை மீட்டுகையில்
விரலில் நடமாடுபவன் நீ !
வினைப் பயனிலிருந்து
மீட்கும் விமோச்சணன் நீ !
சித்திரத்தில்
என் கரம் தீட்டும் உருவம் நீ !
சிந்தையில்
என்றும் குடிகொண்ட தர்மம் நீ !
வாழ்க்கைப்
பாதையை உணர்த்திய வழிகாட்டி நீ !
வாழ்த்துகளை
வாரி வழங்கிய என் வள்ளல் நீ !
அன்னையின்
உள்ளம் நீ !
ஆன்மாவின்
உயிரும் நீ !
சிற்பியின்
உளியும் நீ !
சிறுபிள்ளையின்
சிரிப்பும் நீ !
கொஞ்சும்
சலங்கையும் நீ !
பிஞ்சுக்
குழந்தையும் நீ !
கண்ணின்
கருவிழி நீ !
கன்னியின்
கருத்தும் நீ !
விண்ணின்
சந்திரன் நீ !
மண்ணின்
மன்னவன் நீ !
என் எல்லாமும்
நீ !
என் எல்லையும்
நீ !
உணர்ந்தேன்
உன்னை !
அர்ப்பணித்தேன் என்னை
!
- அரங்க ஸ்ரீஜா
கண்ணன் என் காதலன் !!!
சிந்தையில்
உறையும் உன்னை நினைக்கிறேன் !
விந்தையில்
நான் நிற்பதை எண்ணி வியக்கிறேன் !
சொல்லும்
சொற்களில் உன்குரல் கேட்கிறேன் !
செல்லும்
பாதையில் உன்முகம் காண்கிறேன் !
உன்னை விட்டு
விலகினால் தவிக்கிறேன் !
என்னை உன்னிடம்
சேர்க்கத் துடிக்கிறேன் !
சிணுங்கும்
உன்னைக் கண்டு சிலிர்க்கிறேன் !
சினம் கொண்டு
நீ செல்லும்போது சிவக்கிறேன் !
காந்தம்
போன்ற கண்களைக் காண்கிறேன் !
காந்தர்வனின்
அழகில் கரைகிறேன் !
தஞ்சம் கேட்கும்
உன்னைத் தவிர்க்கிறேன் !
நெஞ்சம்
நிறைந்த உன்னைத் துதிக்கிறேன் !
உரைக்கும்
உன்னத மொழிகளில் உறைகிறேன் !
உருகிய மனதால்
எனைமறந்து உளறுகிறேன் !
நகைக்கும்
நளினத்தில் நாயகனாய் நிற்கின்றாய் !
நங்கையின்
நாணம் பெருகச் செய்கின்றாய் !
அழகில் சிறந்தவன்
நீ
அழுகையைத்
துடைப்பவன் நீ
கண்ணின் விழி நீ
காற்றின் மொழி நீ
கருத்தின் கூற்று நீ
கவிதையின் ஊற்று நீ
சிரிப்பின்
அழகில் சிதறடித்தாய் என்னை !
சீரிய சிந்தையால்
சிறைப்பிடித்தாய் என்னை !
மனம் வென்ற மாதவன் உன்னை !
மணக்க விழைகிறேன் மானுட மங்கை !
- அரங்க ஸ்ரீஜா
கண்ணன் என் காதலன் !!!
கண்முன் நின்றாய் - என்
கரம் பட மறைந்தாய்
மண்ணை அளந்தாய் - என்
மனத்தைக் கவர்ந்தாய்
இன்முகச் சிரிப்பால் - என்
இதயம் நிறைந்தாய்
செந்தேன் மொழியால் - என்
செவியை நனைத்தாய்
குழலூதி ஆநிரை மேய்த்தாய்- உன்
எழில் கொண்டு என்னகம் வென்றாய்
பிஞ்சு பாதங்கள் - அதில்
கொஞ்சும் சலங்கைகள் !
தாமரை விழிகள் - அதில்
ததும்பும் லீலைகள் !
உன் குழலிசையே என் விருந்து !
ஏன் பிரிகின்றாய் என்னிலிருந்து !
உன் வார்த்தைகளே என் வேதம் !
ஏன் காட்டுகின்றாய் என்மேல் கோபம் !
கார்முகில் வண்ணன் உன்னை !
கரம்பற்ற நினைத்தேன் நங்கை !
சூடிக்கொண்டாய் மெல்லிய மயிலிறகை !
சுந்தரனையடைய விரித்தேன் என் சிறகை !
உன் சிணுங்கலில் சிதைகிறேன் !
உன் சிந்தையில் மிதக்கிறேன் !
உன் பார்வையில் பசி மறந்தேன் !
உன் ஆடலில் எனை இழந்தேன் !
மோகம் கொண்ட மனம்
மோதி அலைகிறது தினம்
காதல் கொண்டது உள்ளம்
கண்ணில் பெருகுது வெள்ளம்
காற்றில் வரும் உன் ஓசை - அதைக்
கட்டித் தழுவிட ஆசை
மனம் கமழும் உன் பூமாலை
மார்போடு சூடுவேன் நாளை
விரல்கள் தீண்டிட - நான்
விழைந்தேன் நாணிட
அணைக்கும் அழகிய கரம்
அதைப் பார்ப்பதற்கே சுகம்
கண்கவர் அழகில் மயங்கினேன் மங்கை !
கயவனே நீ வீரத்தில் வேங்கை !
செவ்விதழ் கொண்டு வருடினாய் என்னை !
செருக்கழிந்து நான் அடைந்தேன் உன்னை !
- அரங்க ஸ்ரீஜா
No comments:
Post a Comment