ஜெபம் செய்யும் உதடுகளைவிட உதவி செய்யும் கரங்களே மேலானவை!
விலைக்கு மேல் விலை விற்றாலும்
மனிதனின் விலை என்ன ?
உயிர் விட்டு விட்டால் !
உடல் சுட்டு விட்டால் !
ஒருவரின் இறப்புக்குப் பின்
அவருடன் செல்வது ஒன்றுமே இல்லை !
எனவே வாழும் போதும் சரி!
வாழ்வு முடிந்த பிறகும் சரி !
நமக்குப் பின் வரும் சந்ததிகளின் மனத்தில்
நிலைத்து நிற்குமாறு பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் .
" மனிதன் தெய்வ சாயலில்
தெய்வ சக்தியுடன்
தெய்வ சாரமாகப் படைக்கப்பட்டிருக்கிறான் "
அப்படி இருக்க வாழ்கின்ற மனித உயிர்களை வாட விடலாமா ?
அது தெய்வத்தை வாட விட்டதற்குச் சமம் அல்லவா ?
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வடினாரே !
அருட்பிரகாசர் ஏன் தெரியுமா ?
பரந்த உள்ளமே பரம்பொருள் இன்பம் !
என்பதை அவர் நம்பினார்
பயிர் வாட வருந்தியவர் உயிர் வாட விட்டு விடுவாரா?
வடலூரில் அன்ன சத்திரம் அமைத்து பசிப்பிணி போக்கி உதவினார்.
இயேசு பெருமான் "வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே !!
நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்
நான் இளைப்பாறுதல் தருவேன் !" என்று அழைத்து
- பாவிகளை இரட்சித்தார்
- குருடர்களைப் பார்வை அடையச் செய்தார்
- குஷ்ட ரோகிகளைக் குணப்படுத்தினார்
- ஐந்து அப்பம் மீன்களைக் கொண்டு 5000 பேரைப் பசியாற்றினார்
மாயக் கண்ணனோ ஆயர்பாடி மக்களின் துயர் துடைத்திட செய்திட்ட லீலைகள் சொல்ல முடியாதவை!! சொல்லில் அடங்காதவை !!
ஈசன் தன் பக்தர்களின் துயர் துடைத்திட புரிந்த திருவிளையாடல்கள்
ஒன்றா? இரண்டா? அவற்றைச் சொல்ல ஓர் நாள் போதுமா?
ஆக மதங்கள் எதுவாக இருந்தாலும்
ஏழைக்கு இறங்க வேண்டும் !
இயலாதவருக்கு உதவ வேண்டும் !
என்ற தத்துவங்களையே வலியுறுத்துகின்றன .
மனிதாபிமானமே மத அபிமானம் !!!
என்பது வெறும் போதனை அல்ல
நாம் செய்து காட்ட வேண்டிய சாதனையும் ஆகும் .
ஜெபம் தெய்வத்தை நோக்கி செய்யப்படுகிறது !!
தெய்வம் எது ?
உண்மை தான் தெய்வம் !!
அன்பு தான் தெய்வம் !!
"தேரோடும் வீதி கண்டேன்
தெப்பக் குளம் கண்டேன்
தேவாதி தேவனை எங்கு தேடியும் கண்டிலேனே !"
என்று ஒருத்தி தோழியிடம் வருந்திக் கூறினாள்.
"உள்ளத்தில் உள்ளானடி - அதை
நீ உணர வேண்டுமடி
உள்ளத்தில் உள்ளான் எனில்
கோயில் உள்ளேயும் காண்பாயடி "
என்று தோழி அவளிக்குத் தெய்வத்தின் இருப்பிடத்தைத் தெளிவுபடுத்தினாள் .
தெய்வத்தைப் பற்றிய இந்தத் தெளிவு வந்துவிட்டால் !
நீங்களும் நானும் தெய்வம் என்ற எண்ணம் வந்து விட்டால் !
சகிப்புத் தன்மையும் சகோதரத்துவமும்
சாதனை செய்ய உதவும்
சாதனங்களாகி விடும் !!!
அன்பு என்ற ஒன்று இவ்வுலகில் இல்லை எனில்
சுயநலத்தில் வாழ்வு சுடுகாடாய் மாறிவிடும் !!
சீர் செய்து சிதைக்கச் சிறுமை முயன்றாலும்
யார் செய்த புண்ணியமோ ? அன்பு இன்னும் வாழ்கிறது !
"உன்னிடத்தில் நீ அன்பு கூர்வது போல
பிறரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் "
என்பதே மதங்கள் நமக்கு உணர்த்தும் போதனைகள் .
எனவே பிறருக்காக இறைவனிடம் மன்றாடுவதை விட நம்முள் நிறைந்திருக்கும் தெய்வத்தின் துணையோடு
எங்கு தேவையோ
அங்கு சேவைக் கரம் நீட்டுவோம்
மனிதரில் புனிதராக வாழ்வோம் !!
-அரங்க ஸ்ரீஜா
No comments:
Post a Comment