கோதையின் பாவை
திருப்பாவை பாசுரம் 21
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்!
திருப்பாவை பாசுரம் 22
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டுங்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏல் ஓர் எம்பாவாய்!
திருப்பாவை பாசுரம் 23
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்புடைய
சீரிய சிங்காசனத்திலிருந்து,
யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்!
திருப்பாவை பாசுரம் 24
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கு ஏல் ஓர் எம்பாவாய்!
திருப்பாவை பாசுரம் 25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தொம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்!
திருப்பாவை பாசுரம் 26
மாலே! மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருள் ஏல் ஓர் எம்பாவாய்!
திருப்பாவை பாசுரம் 27
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்
பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகளும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்!
திருப்பாவை பாசுரம் 28
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா! நீ தாராய் பறை ஏல் ஓர் எம்பாவாய்!
திருப்பாவை பாசுரம் 29
சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்!
திருப்பாவை பாசுரம் 30
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உறைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கன் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!
No comments:
Post a Comment