Saturday, 14 December 2013

SRIMAD BHAGVAT GITA - CHAPTER 1

ஸ்ரீ மத் பகவத்கீதை

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் வியாக்கியானம் 

குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் இருந்த ரண நதிக்கு பீஷ்மரும் துரோணரும் கரைகள்ஜயத்ரதன் ஜலம்; காந்தார மன்னன் நீலோத்பலம்  என்னும் புஷ்பம் ; சல்யன் சுறாமீன்; கிருபன் என்பவன் பிரவாகம்; கர்ணன் பேரலைகள்; அச்வத்தாமனும் விகர்ணனும் பயங்கரமான மகர மீன்கள்; துர்யோதனன் நீர்ச்சுழல். கிருஷ்ணனைப் படகோட்டியாகக் கொண்டு அது பாண்டவர்களால் கடக்கப்பட்டது .

அர்ஜுன விஷாத யோகம்

பார்வையற்ற திருதராஷ்டிரன் போருக்குச் செல்ல இயலாததால் அஸ்தினாபுரத்தில் உள்ள தன் அரண்மனையில் இருந்துகொண்டே போர்க்களத்தில் நடப்பவற்றைத்  தனக்குச் சொல்லும்படி சஞ்ஜயன் என்ற மந்திரியை நியமிக்கிறான். வேதவியாசரருளால் ஞானதிருஷ்டி பெற்றவனாய் சஞ்ஜயன் போர்க்களத்துச் செய்திகளைத் திருதராஷ்டிரனுக்குச் சொல்கிறான். இதுவே முதல் அத்தியாயமாகும்.

த்ருதராஷ்டிர  உவாச

1.   தர்மக்ஷேத்ரே  குருக்ஷேத்ரே ஸமவேதா  யுயுத்சவ : |
  மாமகா: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய||

பொருள் : "சஞ்சயா ! தர்ம க்ஷேத்திரமாகிய குரு க்ஷேத்திரத்தில் யுத்தம் செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள்?" என்று த்ருதரஷ்ட்ரன் வினவுகிறான்.

ஸஞ்ஜய என்னும் சொல் விருப்பு வெறுப்பு முதலியவைகளை அறவே வென்றவன் என்று பொருள்படுகிறது. ஓரம் சாராது நடு நிலையில் இருப்பவனுக்கே ஞானக்கண் உண்டாகிறது. ஆதலால் தான் வியாச பகவான் ஸஞ்ஜயனுக்கு யுத்தத்தில் நிகழ்பவைகளை உள்ளபடி காணவல்ல ஞானக்கண்ணைக் கொடுத்தருளுகிறார்.

போருக்கு இருதரத்தாரும் அணிவகுத்திருப்பதை ஸஞ்ஜயர் விளக்குகிறார்

ஸஞ்ஜய உவாச 2-20

2. த்ருஷ்ட்வா து பாண்டவானீ கம்  வ்யூடம் துர்யோதனஸ்ததா |     ஆசார்யமுபஸங்கம்ய  ராஜா வசனமப்ரவீத் ||

பொருள் : அப்போது துரியோதனன் அணிவகுத்து நின்ற பாண்டவர்களுடைய படையைப் பார்த்ததும் தன் குருவாகிய துரோணரை அணுகி (பின்வரும்) வார்த்தையைச் சொல்லலாயினான் .

3.   பஸ்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம் |
  வயூடாம் த்ருபதபுத்ரேண தவ ஸிஷ்யேண தீமதா ||

பொருள் : குருவே ! துருபதன் மகனும் உமது சிஷ்யனுமான  அவ்வல்லவனால் அணிவகுக்கப்பட்டிருக்கும் இப்பெரிய பாண்டவப் படையைப் பாரும் !

4. அத்ர ஸூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுனஸமா யுதி |
  யுயுதானோ விராடஸ்ச த்ருபதஸ்ச மஹாரத​: ||

பொருள் : இங்கு சூரரும் பெரிய வில்லாளிகளும் யுத்தத்தில் பீமனுக்கும்  பார்த்தனுக்கும் சமானமானவருமான பலர் இருக்கிறார்கள் யுயுதானன்; விராடன்; மகாரதனாகிய துருபதன்;

5. த்ருஷ்டகேதுஸ்சேகிதான​: காசிராஜஸ்ச வீர்யவான் |
  புருஜித் குந்திபோஜஸ்ச சைப்யஸ்ச நரபுங்கவ​: ||

பொருள் : திருஷ்ட கேது; சேகிதானன்; வீரியமுடைய காசி ராஜன்; புருஜித்; குந்தி போஜன்; மனிதருள் முதன்மை வகிக்கும் சைபியன்;

6.  யுதாமன்யுஸ்ச விக்ராந்த உத்தமௌஜாஸ்ச வீர்யவான் |
  ஸெளபத்ரோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வ ஏவ மஹாரதா​: ||

பொருள் : பேராற்றல் மிக்க யுதாமன்யு; வல்லமையுடைய  உத்தமௌஜஸ்   என்ற வீரன்; சுபத்திரையின் மகன்; திரௌபதியின்  புதல்வர்கள்; இவர்கள் எல்லோருமே மகாரதர்கள் .

7. அஸ்மாகம் துவிஸிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம|
  நாயகா மம ஸைந்யஸ்ய சம்ஞார்த்தம்   தான்ப்ரவீமி தே||

பொருள் : பிராம்மண சிரேஷ்டரே ! நம்மவர்களுள் யார் சிறந்தவர்களோ அவர்களைக்கூடத் தெரிந்துகொள்ளும். எனது சேனையின் நாயகர்களைப் பற்றி உமக்குத் தகவல் தெரிவித்தற்பொருட்டுச் சொல்கிறேன் .

துர்யோதனன் மறைமுகமாகத் தனது குருவை நிந்திக்கிறான். போர் முறையைப் புகட்டுதலில் நீர் எவ்வளவு வல்லவராயிருந்தாலும், முடிவாகப் பார்க்குமிடத்து நீர் ஒரு பிராம்மணர் தானே! பயங்கொள்ளியாகிய உமக்குச் சண்டையில் எங்கிருந்து உற்சாகம் வரப்போகிறது? பாண்டவப் படையைப் பார்த்து நீர் பயப்படுவது இயல்பு. எனினும் எதற்கும் அஞ்சாதீர். நம் பக்கத்திலும் பேராற்றல் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர்-இதுதான் அவன் பேச்சின் கருத்து.

8.   பவாந் பீஷ்மஸ்ச கர்ணஸ்ச க்ருபஸ்ச ஸமிதிஞ்ஜய​: |
  அஸ்வத்தாமா விகர்ணஸ்ச ஸெளமதத்திர்ஜயத்ரத: ||

பொருள் : தாங்களும் ; பீஷ்மரும்; கர்ணனும் போர்முனையில் வெற்றியே வடிவெடுத்துள்ள கிருபாசாரியரும், அஸ்வத்தாமனும், விகர்ணனும், சோமதத்தன் புதல்வன் பூரிசிரவசும், ஜெயத்ரதனும் இருக்கின்றீர்கள்.


துரோணாசாரியரை அளவுக்குமிஞ்சி அவமரியாதை செய்து விட்டதாக அஞ்சுகிற துர்யோதனன் அதற்கு ஈடாக சேனாதிபதியாகிய பீஷ்மருக்கு முன்பாக அவரை வைத்து முகஸ்துதி செய்கிறான். மேலும் துரோணருடைய மைத்துனராகிய கிருபரை "போர் முனையில் வெற்றியே வடிவெடுத்துள்ளவர்" என்று புகழ்ந்து பேசுகிறான். இதுபோன்ற முகஸ்துதிக்கு யார்தான் வசப்படமாட்டார் !

9.  அந்யே பஹவ​: ஸூரா மதர்த்தே த்யக்தஜீவிதா​: |
  நானாஸ்த்ரப்ரஹரணா​: ஸர்வே யுத்தவிஸாரதா​||

பொருள் : மேலும் அனைவரும் என்பொருட்டு உயிரைக் கொடுக்கத் துணிந்தவர்களாகவும் பலவிதமான ஆயுதங்களையும் அஸ்திரங்களையும் உடையவர்களாகவும் யுத்தத்தில் தேர்ந்தவர்களாகவும் பல சூரர்கள் இருக்கின்றனர்.

10.   அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம் |
   பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம் ||

பொருள் : பீஷ்மர் பாதுகாக்கும் நமது படை பரந்து அளவுகடந்து இருக்கிறது. பீமனின் படையோ கட்டுக்கு அடங்கியது .

ஆட்களின் எண்ணிக்கையிலிருந்து ஒரு சேனையின் வலிவை அறிந்துகொள்ள முடியாது. கட்டுக்கு அடங்கியிருக்கிற பாங்கிலிருந்து ஒரு படையின் திறமை தோன்றும். தங்களுடைய சேனை கட்டுக்கு அடங்காதது; பாண்டவர்களுடையதோ கட்டுக்கு அடங்கியது என்று எண்ணிக்கையின் விரிவைத் துர்யோதனன் தற்பெருமையாகச் சொல்லுகிறான். வண்ணத்தில் பெரியது எனினும் வலிவில் சிறியது என்ற அமங்கலக் கருத்து அதில் அடங்கியிருக்கிறது.

 11. அயநேஷு ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா​: |
   பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த​: சர்வ ஏவ ஹி ||

பொருள் : நீங்களனைவரும் படை வகுப்புகள் அனைத்திலும் அவரவர் இடங்களில் நின்றுகொண்டு பீஷ்மரையே காப்பாற்றுக !

முயற்சியற்றவர்களாகிய நீங்கள் என் சொற்படியாவது கேட்டு நடந்துகொள்ளுங்கள் என்று சேனாதிபதிகளை அவமதிப்பது போன்றிருக்கிறது துர்யோதனனது கூற்று.

12. தஸ்ய ஸஞ்ஜனயன்  ஹர்ஷம் குருவ்ருத்த​: பிதாமஹ​: |
   ஸிம்ஹநாதம் விநத்யோச்சை​: சங்கம் தத்மௌ ப்ரதாபவாந் ||

பொருள் : வல்லமை வாய்ந்தவரும் குருவம்ச வயோதிகருமான பீஷ்மர் துர்யோதனனுக்கு உற்சாகமூட்ட சிம்ம நாதமிட்டு  சங்கை முழங்கினார் .

துரோணாசாரியரை இகழ்கின்ற போக்கில் துர்யோதனன் மிகைபடப் பேசிவிட்டான். அதனால் அவருடைய ஊக்கமும் குறைந்தது. மற்ற சேனாதிபதிகள் ஓரளவில் அவமதிக்கப்பட்டனர். துர்யோதனனுடைய உள்ளத்திலோ அச்சம் குடி புகுவதாயிற்று. நிலைமை கெட்டு வருவதை பீஷ்மர் பார்த்தார். மேலும் மனத்தளர்ச்சிக்கும் குழப்பத்துக்கும் இடந்தரலாகாது. தம் பேரன் மீது இரக்கம் வைத்துப் பாட்டனார் சங்குநாதித்துத் திடீரென்று காட்சியை மாற்றுகிறார். அதன் மூலம் கௌரவர்களே யுத்தத்தைத் துவக்கியவர் ஆகின்றனர். ஆக்கிரமிப்பு என்னும் குற்றம் அவர்களைச் சார்ந்ததாகிறது.

13. தத​: ஸங்காஸ்ச பேர்யஸ்ச பணவாநககோமுகா​: |
   ஸஹஸைவாப்யஹந்யந்த ஸப்தஸ்துமுலோ பவத் ||

பொருள் : பின்னர் சங்குகளும் பேரிகைகளும் தம்பட்டங்களும் பறைகளும் கொம்புகளும் திடீரென்று கௌரவர்கள் பக்கமிருந்து முழக்கப்பட்டது .

14. தத​: ஸ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ |
  மாதவ​: பாண்டவஸ்சைவ திவ்யௌ சங்கௌ ப்ரதத்மது​: ||

பொருள் : பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சிறந்த தேரில் வீற்றிருந்த மாதவனும் பாண்டவனும் (அர்ஜுனன் ) தங்கள் தெய்வீகச் சங்குகளை உரக்க ஊதினர்

15. பாஞ்சஜன்யம் ஹ்ருஷீகேசோ தேவதத்தம் தனஞ்ஜய​: |
  பௌண்ட்ரம் தத்மௌ மஹாசங்கம் பீமகர்மா வ்ருகோதர​||

பொருள் : ஹிருஷிகேசன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார் . தனஞ்ஜயன் தேவதத்தம் என்ற சங்கை நாதித்தான் . பீமன் பௌண்ட்ரம்  என்ற சங்கை ஒலித்தான்.

ஹிருஷீகேசன் என்பது இந்திரியங்களுக்குத் தலைவன் என்று பொருள்படுகிறது. இது கிருஷ்ணனுக்கு ஓர் அடைமொழி. இந்திரியங்களைக் கட்டி ஆளுபவன் எச்செயலைச் செய்தாலும் அதை ஒழுங்காகவும் நேர்மையாகவும் செய்வான்.

தனஞ்ஜயன் என்ற சொல் செல்வத்தை வென்றவன் என்ற கருத்துடையது, அர்ஜுனன் ஆங்காங்குச் சென்று அரசர்களிடம் ஒன்றுக்கும் பயன்படாது அடைபட்டுக்கிடந்த செல்வங்களை யெல்லாம் பெயர்த்தெடுத்துக் கொண்டுவந்து சேர்ந்தான். ஆகையால் அவனுக்கு அப்பெயர் வந்தது.

 பீமசேனனுக்கு வ்ருகோதரன் என்று பெயர். ஓநாயின் வயிறுபோன்று ஒடுங்கிய வயிறு உடையவன் என்றும், எதையும் எளிதில் ஜீரணம் செய்யக்கூடியவன் என்றும் இது பொருள்படுகிறது. நல்ல ஜீரணசக்தி யுடையவர்கள் எச்செயலையும் ஆற்றவல்லவர் ஆகின்றனர்.


16. அனந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர​: |
   நகுல​: ஸஹதேவஸ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ ||

பொருள் : குந்தி மகனாகிய ராஜா யுதிஷ்டிரன் அனந்த விஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகதேவனும் (முறையே) சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினர்.

நாடு ஆண்டாலும் ஆளாவிட்டாலும் அரசனது இயல்புகள் அனைத்தையும் அடையப் பெற்றிருக்கிறபடியால் யுதிஷ்டிரனுக்கு ராஜா என்னும் சிறப்புச்சொல் பொருத்தமாக அமைகிறது. இப்பொழுது அவன் மூடிசூடாத மன்னனாயிருக்கிறான்.

17. காச்யஸ்ச பரமேஷ்வாஸ​: ஸிகண்டீ மஹாரத​: |
   த்ருஷ்டத்யும்னோ  விராடஸ்ச ஸாத்யகிஸ்சாபராஜித​: ||

பொருள் : வில்லாளிகளில் தலைசிறந்த காசிராஜனும், மகாரதனாகிய சிகண்டியும், திருஷ்டத்யும்னனும், விராடனும், வெல்லப்படாத சாத்தியகியும்,

சிகண்டி என்ற சொல் முகத்தில் மீசையில்லாதவன் எனப் பொருள்படுகிறது. இவன் பேடுவாக இருந்தான். பீஷ்மருக்கு எதிரில் இவனை நிறுத்தியபொழுது அவர் போர்புரியாது சும்மா இருந்துவிட்டார். ஆதலால் அவருக்குத் தோல்வியுண்டாயிற்று. திருஷ்டத்யும்னன் என்ற பதத்திற்குப் பொருள் எவராலும் எதிர்க்க முடியாதவன் என்பதாம்.

18. த்ருபதோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வஸ​: ப்ருதிவீபதே |
  ஸௌபத்ரஸ்ச மஹாபாஹு​: ஸங்காநன் தத்மு​: ப்ருதக் ப்ருதக் ||

பொருள் : மண்ணாள்பவனே ! துருபதனும், திரௌபதியின் புதல்வர்களும் , பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும் தனித்தனியே தத்தம் சங்குகளை ஒலித்தனர்.
  
பிருதிவீபதே - மண்ணாள்பவனே என்று திருதராஷ்டிரன் இங்கு ஸஞ்ஜயனால் அழைக்கப்படுவது அரசனது பொறுப்பை அவனுக்கு ஞாபகமூட்டுதற் பொருட்டேயாம். நாட்டைக் கடும் போரில் ஆழ்த்திவிடுவதும் சண்டை சச்சரவின்றி சமாதானமாயிருக்கச் செய்வதும் ஆகிய இரு செயல்களும் நாடாள்பவனுக்கு இயலும். உனது விருப்பம் யாதோ என்னும் எச்சரிக்கை இங்கே தொக்கி நிற்கிறது.

19.  கோஷோ  தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயானி  வ்யதாரயத் |
   நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யனுநாதயன் ||

பொருள் : அப் பெருமுழக்கம் விண்ணையும் மண்ணையும் உடனொலிக்கச் செய்வதாய், திருதராஷ்டிரக் கூட்டத்தாரின் நெஞ்சுகளைப் பிளந்தது.

பாண்டவப்படை தொகையில் சிறியது எனினும் அப்பக்கம் இருப்பவர்களுக்குப் பெருமுழக்கம் செய்ய இயன்றது. தெய்வத்தின் துணையும் தர்மத்தின் வலிவுமே அதற்குக் காரணமாயிற்று. குற்றமுடையவர்கள் நெஞ்சில் சிறுபிள்ளையின் பழிப்பும் சுடுசரம் போன்று பாயும். கௌரவர்களுடைய நெஞ்சத்தில் வஞ்சகமிருந்தபடியால் அது வீறப் பிளக்கப்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை.

20. அத வ்யவஸ்திதான்ன்த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ரான் கபித்வஜ​:  |
   ப்ரவ்ருத்தே சஸ்த்ரஸம்பாதே தனுருத்யம்ய பாண்டவ​: ||

பொருள் : அப்போது  குரங்குக் கொடியுயர்த்த பார்த்தன் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை நோக்கி வில்லை யேந்திக் கொண்டு, கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான்.

தன்னை எதிர்ப்பவர்களைக் காண அர்ஜுனன் தவிக்கிறான்

அர்ஜுன உவாச  21-23

21. ஹ்ருஷீகேசம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே |
   ஸேனயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மேச்யுத ||

பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: “அச்யுதா, படைகளிரண்டுக்குமிடையே  என் தேரைக் கொண்டு நிறுத்துக".

22.  யாவதேதாந்நிரீ ஷேஹம் யோத்துகாமானவஸ்திதான்   |
   கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிநன் ரணஸமுத்யமே ||

பொருள்:  "யான் யாரோடு யுத்தம் செய்ய வேண்டுமென்பதையும், போரை விரும்பி முன்னிற்பார் யார் என்பதையும் நான் காணவேண்டும்" என்றான்

23. யோத்ஸ்யமாநாநவே ஷேஹம் ஏதேத்ர ஸமாகதா​:  |
   தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ​: ||

பொருள் : “துஷ்ட மதிகொண்ட துரியோதனனுக்குப் பிரீதி செய்யும் வண்ணம், இங்கு போர் செய்யத் திரண்டு நிற்போரை நான் காண வேண்டும்என்றான்.

அளவுக்கு மிஞ்சிய ஊக்கம் விரைவில் சோர்வை உண்டு பண்ணக்கூடியது. இனி வரப்போகும் மனத்தளர்ச்சிக்கு முன்னறிகுறியாக அர்ஜுனனுக்கு அளவில்லாப் போர்த்திறம் பிறக்கிறது. ஆகவே தன்னை எதிர்ப்பார் யார் என்று காண அவன் காமுறுகிறான்.

அர்ஜுனன் எதிரிகளுக்குப் பதிலாக உறவினர்களையே காண்கிறான் 24-27

24. ஏவமுக்தோ ஹ்ருஷீகேஸோ குடாகேசேன பாரத |
   ஸேனயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோயுத்தமம் ||

பொருள் : சஞ்ஜயன் சொல்லிக்கொண்டு வருகிறான்: திருதராஷ்டிரரே ! இங்ஙனம் குடாகேசன் ரைத்ததைக் கேட்ட கண்ணன் மிகவும் மேன்மை கொண்ட அத்தேரை இரண்டு படைகளுக்குமிடையே கொண்டு நிறுத்தினான்.

அர்ஜுனனுக்குக் குடாகேசன் அல்லது தூக்கத்தை வென்றவன் என்பது ஒரு பெயர். நினைத்தபடி நினைத்தபொழுது தூங்கவோ அல்லது தூங்காதிருக்கவோ அவனுக்கு இயலும். மனதை நன்கு வென்றவனுக்கே இது இயலும். மனதை வென்றவன் எதற்கும் கலங்கான். அத்தகைய மனவுறுதியுடையவனையும் கலக்கும்படியான பெரியதோர் போராட்டம் வரப்போகிறது என்பது அவனுக்குப் காண்பிக்கப்படுகிறது.

25. பீஷ்மத்ரோணப்ரமுகத​: ஸர்வேஷாம் மஹீக்ஷீதாம் |
  உவாச பார்த்த பச்யைதாந் ஸமவேதாநன்குருனிதி ||

பொருள் : பீஷ்மருக்கும் துரோணருக்கும் மற்றெல்லா வேந்தர்களுக்கேதிரில் தேரை நிறுத்தி, “பார்த்தா! கூடியுள்ள கௌரவர்களைப் பார்!” என்றார் கிருஷ்ணர்.

26. தத்ராபச்யத் ஸ்திதான் பார்த்த​: பித்ரூனத பிதாமஹான் |       ஆசார்யான்மாதுலாநன்ப்ராத்ரூன் புத்ராநன்பௌத்ராநன் ஸகீன்ஸ்ததா ||

பொருள் : அங்கு சேனையில் இருக்கும்  தன்னுடைய தந்தையரையும், பாட்டன்மாரையும், குருமார்களையும், மாதுலரையும், அண்ணன் தம்பிகளையும், மக்களையும், பேரர்களையும், தோழர்களையும் கண்டான் பார்த்தன் .

27. ஸ்வஸுரான்ஸுஹ்ருதஸ்சைவ ஸேனயோருபயோரபி |
  தான்ஸமீக்ஷ்ய கௌந்தேய​: ஸர்வான்பந்தூனவஸ்திதான் ||

பொருள் : மாமன்மாரையும், நண்பர்களையும், உறவினரையும் இரண்டு படைகளிலும் நிற்கக் கண்டு, குந்தி மகனாகிய பார்த்தன் போரிரக்கம் படைத்தவனாய்த் துயருடன் சொல்லுகிறான்:

28. க்ருபயா பரயா விஷ்டோ விஷீதன்னி தமப்ரவீத் |
  த்ருஷ்ட்வேமம் ஸ்வஜனம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம் ||

பொருள் அர்ஜுனன் சொல்கிறான்: கிருஷ்ணா, போர் செய்ய வேண்டி  இங்கு திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு,

29. ஸீதந்தி மம காத்ராணி முகம் பரிசுஷ்யதி |
  வேபதுஸ்ச ஸரீரே மே ரோமஹர்ஷஸ்ச ஜாயதே ||

பொருள் : என் உறுப்புகள் சோர்வடைகின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடல்  நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது.

30. காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே |
   ந ஸக்னோம்யவஸ்தாதும் ப்ரமதீவ மே மன​: ||

பொருள் : கையிலிருந்து காண்டீவம் நழுவுகிறது. உடம்பில் தோல் எரிகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழல்கிறது.


31. நிமித்தானி பச்யாமி விபரீதானி  கேசவ |
  ந ச்ரேயோ னுபச்யாமி ஹத்வா ஸ்வஜனமாஹவே ||

பொருள் : கேசவா, கேடுடைய சகுனங்கள் பல காண்கிறேன். போரிலே சுற்றத்தார்களை மாய்ப்பதில் நான் நன்மையை காண்கிறேனில்லை.

32.  காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ராஜ்யம் ஸுகானிச|
  கிம் நோ ராஜ்யேன கோவிந்த கிம் போகைர்ஜீவிதேன வா ||

பொருள் :கண்ணா, நான் வெற்றியையும்  ராஜ்யத்தையும் இன்பங்களையும் வேண்டுகிலேன். கோவிந்தா. நமக்கு ராஜ்யத்தால்  இன்பங்களால் ஜீவித்திருப்பதால் ஆவதென்ன ?

33. யேஷாமர்த்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா​: ஸுகானிச|
  த இமே வஸ்திதா யுத்தே ப்ராணான்ஸ்த்யக்த்வா தனானிச||

பொருள் : யாவர் பொருட்டு நாம் ராஜ்யத்தையும், போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ, அவர்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்தோராய் இங்கு வந்து நிற்கிறார்கள்.

34.   ஆசார்யா​: பிதர​: புத்ராஸ்ததைவ பிதாமஹா​: |
   மாதுலா​: ச்வசுரா​: பௌத்ரா​: ஸ்யாலா​: ஸம்பந்தினஸ்ததா ||

பொருள் குருக்களும், தந்தையரும், மக்களும், பாட்டன்மாரும், மாதுலரும், மாமன்மாரும், பேரரும், மைத்துனரும், சம்பந்திகளும் இங்கு நிற்கிறார்கள்

குந்தியின் மகன் என்று இயம்புவதன் மூலம், தாயின் இயல்பை-பேதைமையை அர்ஜுனன் விரைவில் பெற்றுவிட்டான் என்பது குறிப்பிடப்படுகிறது. இதுகாறும் சத்துரு பாவனையோடிருந்த அவனுக்கு இப்பொழுது ஒரு நெருக்கடியில் திடீரென்று மித்திரபாவனை வருகிறது. இதை விவேகத்தின் விளைவு எனலாகாது. விவேகமின்மைக்கே இது எடுத்துக்காட்டாகும். நிலை தடுமாற்றம் நிகழ்ந்துவிட்டது. அஞ்ஞானமோ இருள் போன்றது. மனிதனுடைய வீழ்ச்சிக்கு அதுவே காரணமாகிறது. வீழ்ச்சியின் முதற்படி இப்பொழுது ஆரம்பித்திருக்கிறது.

 35. ஏதான்ன  ஹந்துமிச்சாமி க்னதோ பி மதுஸூதன  |
  அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ: கிம் நு மஹீக்ருதே ||

பொருள் மதுசூதனா, யான் கொல்லப்படினும், மூவுலகின் ஆட்சி பெறுதற்கெனினும் இவர்களைக் கொல்லேன்பூமியின் பொருட்டுக் கொல்வேனோ?

36. நிஹத்ய தார்தராஷ்ட்ரான்ந: கா ப்ரீதி: ஸ்யாஜ்ஜநார்தன  |  பாபமேவாச்ரயேதஸ்மான்ஹத்வைதானாததாயின : ||

பொருள் : ஜநார்தனா ! திருதராஷ்டிரப் புதல்வர்களைக்  கொன்று நாம் என்ன இன்பத்தையடையப் போகிறோம்? இந்த ஆததாயிகளைக்   கொல்வதனால் பாவமே நம்மை வந்தடையும்.

ஆததாயினர் என்னும் சொல் பெரும் பாபிகள் எனப்பொருள்படும். ஒருவன் குடியிருக்கும் வீட்டில் தீ வைத்தல், உணவில் விஷத்தை வைத்து வழங்கல், உருவிய வாளோடு ஒருவனைக் கொல்லப் பாய்தல், ஒருவனுடைய செல்வத்தை , நிலத்தை அல்லது மனைவியைத் திருடவும் அபகரிக்கவும் முயலுதல் ஆகிய இவை யாவும் மகா பாபங்களாகின்றன. திருதராஷ்டிரனுடைய மக்கள் இத்தனைவிதக் குற்றங்களையும் செய்தவர்கள் ஆவர். ஆததாயி ஒருவன் பண்டிதனாயிருப்பினும் அவனைக் கொல்லுதல் முறை. ஆனால் இளகிய நெஞ்சத்தால் அர்ஜுனன் அங்ஙனம் செய்ய இசையவில்லை.

37. தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ரான்ஸ்வபாந்தவாநன் |ஸ்வஜனம் ஹி கதம் ஹத்வா ஸுகின : ஸ்யாம மாதவ ||

பொருள் : ஆதலால், சுற்றத்தாராகிய திருதராஷ்டிர வர்க்கத்தாரைக் கொல்லுதல் நமக்குத் தகாது. மாதவா, பந்துக்களைக் கொன்று நாம் இன்புற்றிருப்பதெப்படி?

38. யத்யப்யேதே பச்யந்தி லோபோபஹதசேதஸ: |
  குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே பாதகம் ||

பொருள் : ஆசை மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலத்தையழிப்பதால் விளையும் தீங்கையும் நண்பருக்குச் சதி செய்வதிலுள்ள பாதகத்தையும் காண்கிலராயினும்,

39. கதம் ஜ்ஞேயமஸ்மாபி: பாபாதஸ்மாந்நிவர்திதும் |
  குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபச்யத்பிர்ஜநார்தன ||

பொருள்: ஜநார்த்தன! குலநாசத்தால் உண்டாகும் கேட்டை உணர்ந்த நாம் இப்பாவத்தினின்று பின்வாங்கும் வழியறியாதிருப்பதென்ன?

40. குலக்ஷயே ப்ரணச்யந்தி குலதர்மா: ஸநாதனா : |
   தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்னமதர்மோ பிபவத்யுத ||

பொருள் : குலநாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்மம் அழிவதனால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கிறது.

41. அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய: |
   ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர||

பொருள் : கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கற்பிழக்கின்றனர். மாதர் கெடுவதனால் வர்ணக் கலப்பு உண்டாகிறது.

42. ஸங்கரோ நரகாயைவ குலக்நானாம் குலஸ்ய ச |
   பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா: ||

பொருள் : அக்குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமே ஏற்படுகிறது. இவர்களுடைய பிதிர்க்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள்.

43. தோஷைரேதை: குலக்நானாம் வர்ணஸங்கரகாரகை: |
   உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாஸ்ச சாச்வதா: ||

பொருள் : குழநாசர்கள் செய்யும் வர்ணக் கலப்பை விளைவிக்கும் இக் கேடுகளால் நிலைத்துள்ள ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் நிலை குலைக்கப்படும்.

44. உத்ஸன்னகுலதர்மாணாம் மனுஷ்யாணாம் ஜநார்தன |
   நரகே நியதம் வாஸோ பவதித்யனுசுச்ரும ||

பொருள் : ஜநார்த்தனா! குலதர்மங்களை  இழந்த மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம்.

45. அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம் |
   யத்ராஜ்யஸுகலோபேன ஹந்தும் ஸ்வஜனமுத்யதா: ||

பொருள் : அந்தோ! அரசசுக ஆசையால் சுற்றத்தாரைக் கொல்லத் துணிதல் என்ற பெரிய பாவத்தைச்  செய்யத் தலைப்பட்டோம்!

46. யதி மாமப்ரதீகாரமசஸ்த்ரம் சஸ்த்ரபாணய: |
  தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தன்மே க்ஷேமதரம் பவேத் ||

பொருள் : கையில் ஆயுதமில்லாமல், எதிர்க்காமல் நிற்குமென்னை இந்தத் திருதராஷ்டிர மக்கள்  ஆயுதபாணிகளாய்ப் போரில் மடித்துவிடினும் அது எனக்குப் பெரிய நன்மையாகும்.

47. ஏவமுக்த்வார்ஜுன : ஸங்க்யே ரதோபஸ்த உபாவிசத் |
  விஸ்ருஜ்ய ஸசரம் சாபம் ஸோகஸம்விக்னமானஸ||

பொருள் : சஞ்ஜயன் சொல்கிறான்: இவ்வாறு இயம்பி செருக்களத்தில் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து விட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்த்தட்டில்  உட்கார்ந்து கொண்டான்.